விவசாயி அணைக்கரை முத்துவின் மரணமும், புதிய தமிழகம் கட்சியின் 9 நாட்கள் போராட்டமும்!

Political Puthiya Tamilagam

விவசாயி அணைக்கரை முத்து மரணத்திற்கு நீதி கேட்டு வாகைக்குளம் கிராமத்தில் நடைபெற்ற போராட்டம் பற்றி, புதிய தமிழகம் கட்சி நெல்லை (வடக்கு) மாவட்ட செயலாளர் மூ.சிவகுமார் அவர்கள் ‘தேவேந்திரன் டுடே’ க்கு அளித்த பிரத்யேக பேட்டி;

தென்காசி மாவட்டம், கடையம் ஒன்றியம், வாகைக்குளம் கிராமத்தை சேர்ந்த விவசாயி அணைக்கரை முத்து. 22-7-2020 அன்று இரவு சாப்பிட்டுவிட்டு உறங்கச் சென்ற அவரை குடும்பத்தினருக்கு தெரியாமல், கடையம் சரக வனத்துறையினர் ”விசாரணை” என்ற பெயரில் அழைத்துச் சென்றார்கள். பின்பு இரவு 11.30 மணிக்கு வனத்துறையினர் அணைக்கரை முத்து குடும்பத்தினரிடம் வந்து அணைக்கரை முத்துவுக்கு “சட்டை ஒன்று வேண்டும்” என்று கேட்டிருக்கிறார்கள். அப்போதுதான் தெரியும் அணைக்கரை முத்து அவர்களை வனத்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள் என்று.
பின்பு அவரது மகன் நடராஜன் அவர்களும், அவருடைய மருமகன் ஆறுமுகம் அவர்களும் சிவசைலம் வனசரக அலுவலத்திற்கு சென்றிருக்கிறார்கள். செல்லும் வழியில் வனசரக வாகனத்தில் அணைக்கரை முத்து அழைத்து வரப்பட்டிருக்கிறார். இருபுறமும் வனக்காவலர்கள் அணைக்கரை முத்து அவர்களை இருபுறமும் கைத்தாங்கலாக பிடித்து வைத்திருக்கிறார்கள். பின்பு வனத்துறையினர் உங்கள் தந்தைக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது, ஆகவே மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறோம் என்று வாகனத்தில் ஏற்றி இருக்கிறார்கள். அப்போது, அவரது உடலில் எந்த ஒரு அசைவும் இல்லை. பின்பு கடையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவரது உடலை பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே ”இவர் இறந்து விட்டார்” என்று கூறி தென்காசி மருத்துமனைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று கூறியிருக்கிறார். அங்கு சென்று பரிசோதித்தபோது அவர் இறந்து ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகிவிட்டது என்று கூறியிருக்கிறார்கள். பின்பு அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு நெல்லை மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நாங்கள் 23-7-2020 அன்று தாமிரபரணியில் மாஞ்சோலை போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு மாநில பொதுச் செயலாளர் வே.க.அய்யர் அவர்கள் தலைமையில் அஞ்சலி செலுத்திவிட்டு, தூத்துக்குடி மாவட்டம் முத்தாலங்குறிச்சியில் ஏற்பட்ட பிரச்சினை குறித்து காவல் துணைத்தலைவர் அவர்களை சந்திப்பதற்கு இருந்த நேரத்தில் அணைக்கரைமுத்து அவர்கள் மரணம் குறித்த செய்தியை தலைவர் டாக்டர் அய்யா அவர்கள், எங்களுக்கு தெரிவித்து உடனடியாக அந்த கிராமத்திற்கு செல்லுமாறு ஆணையிட்டார்கள். பின்பு, காவல் துணை தலைவர் அவர்களை சந்தித்து விட்டு வாகைக்குளம் நோக்கி சென்று கொண்டிருந்தோம். நாங்கள் அந்த கிராமத்திற்கு செல்வதற்குள் அணைக்கரைமுத்து அவர்களின் உறவினர்களை காவல்துறையினர் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்துவிட்டார்கள். நாங்கள் கிராமத்திற்கு சென்று மக்களுடன் விசாரித்து, நீங்கள் நடத்தும் போராட்டத்திற்கு புதிய தமிழகம் உங்களோடு இருக்கும் என்று ஆறுதல் கூறிவிட்டு அரசு மருத்துவமனைக்கு வந்தோம். அங்கே மாவட்ட நீதிபதி அவர்கள் அவருடைய குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தினார்கள். அணைக்கரை முத்து அவர்கள் உடலிலுள்ள காயங்கள் குறித்து எழுதி வாங்கினார்கள். பிறகு வந்த குடும்பத்தினரை ஊருக்கு அனுப்பி வைத்தோம். பின்பு மாநில பொதுச் செயலாளர் வே.க.அய்யர் மற்றும் தலைமை நிலைய செயலாளர் த.கிறிஸ்டோபர், மாநில பொறுப்பாளர் கா.இரத்தின பிரகாஷ் ஆகியவர்களை எனது ஊருக்கு அழைத்து வந்து தங்க வைத்தேன். அன்று இரவு டாக்டர் அய்யா அவர்கள் 11:30 மணி அளவில் என்ன தொடர்பு கொண்டு, நாளை அதிகாலை மூன்று மணிக்கு கிளம்பி ஐந்து மணிக்கு அந்த கிராமத்தில் இருக்கவேண்டுமென்று ஆணையிட்டார்கள்.

ஆனால், 24-ம் தேதி காலை கிளம்பி செல்வதற்கு சிறிது காலதாமதம் ஆகிவிட்டது. டாக்டர் அய்யா அவர்கள் காலை எட்டு மணி அளவில் எங்கே இருக்கிறீர்கள்? என்று கேட்டார்கள் சென்று கொண்டிருக்கிறோம் என்று கூறினேன். காலை 5 மணிக்கு அந்த கிராமத்தில் இருக்க சொன்னேன் இவ்வளவு தாமதமாக போனால் என்ன? என்று திட்டினார்கள். பின்பு அந்த கிராமத்திற்கு காலை எட்டு முப்பது மணி அளவில் சென்று சேர்ந்தோம். அந்த குடும்பத்தினரை சந்தித்து உங்கள் போராட்டத்திற்கு புதிய தமிழகம் உங்களோடு கடைசிவரை இருப்போம் என்று கூறி அந்த கிராம மக்களை ஒன்று திரட்டி போராட்டத்தை துவங்கினோம். அதன் பின்பு, ஒவ்வொரு கட்சிகளாக வந்தார்கள் ஆதரவு தெரிவித்தார்கள். போராட்டத்தில் பங்கு பெற்றார்கள். முதலில் பேச்சுவார்த்தைக்கு உதவி ஆய்வாளர் அவர்கள் வந்தார்கள். பேச்சுவார்த்தைக்கு கலெக்டர் மற்றும் எஸ்.பி அவர்கள் வர வேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டோம். அதன் பிறகு இரண்டு, மூன்று ஆய்வாளர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர் வந்தார்கள். எங்களது கோரிக்கையான தாக்கிய வனத்துறையினரை கைது செய்யவேண்டும். ”இறந்தவர் குடும்பத்திற்கு 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்” என்று எங்கள் கோரிக்கையில் உறுதியாக இருந்தோம். பின்பு பேச்சுவார்த்தைக்கு வந்தவர்கள் சென்று விட்டார்கள். அன்று இரவு அங்கு தங்கினோம்.

25ம் தேதி மூன்றாம் நாள் போராட்டம், துவங்கியது காலையில் தாசில்தார் அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வந்தார்கள். அவர்களிடமும் இதே கோரிக்கையை தான் வைத்தோம். பின்பு, உதவி கண்காணிப்பாளர் அவர்கள் பேச்சு வார்த்தைக்கு வந்தார்கள். அவரிடமும் எங்கள் கோரிக்கைகளில் இருந்து பின்வாங்கவில்லை. பிறகு, மாவட்ட வளர்ச்சி அதிகாரி அவர்கள் வந்தார்கள். அவர்களிடமும் இதே கோரிக்கை வைக்கப்பட்டது. பின்பு முதல் அமைச்சர் அவர்கள் இறந்தவர் குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்று அறிவிக்கிறார். இதற்கு இடையில் எங்களுக்கு ஒரு தகவல் வந்தது. அதாவது அணைக்கரைமுத்து அவர்களுக்கு முதல் மனைவி மற்றும் ஒரு மகன் இருப்பதாகவும் அவர்களை வைத்து உடலை வாங்கி அடக்கம் செய்து விடலாம் என்று மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டது. ஆனால் அன்று இரவு 2 மணி வரை அவரது மகனிடம் பேசியதால் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தர ஒத்துழைப்பு கொடுக்க சம்மதித்தார். இரவு 9 மணி அளவில் மாவட்ட கண்காணிப்பாளர் அவர்கள் பேச்சுவார்த்தைக்கு நேரடியாக கிராமத்திற்கு வந்தார். அவர்களிடமும் கோரிக்கையில் இருந்து பின்வாங்காமல் போராட்டத்தின் நோக்கம் குறித்து அவரிடம் விளக்கினோம். அவர் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். நீங்கள் உடலை வாங்கி அடக்கம் செய்ய வேண்டும் என்று கூறினார்கள். ஆனால், நாங்கள் பின் வாங்கவில்லை அன்று இரவும் அதே கிராமத்தில் தங்கினோம்.

26ஆம் தேதி எங்களது போராட்டம். நான்காவது நாள், அன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அன்று காலை 10 மணி அளவில் அவரது முதல் மனைவி மற்றும் அவரது மகனிடம் சமாதானம் செய்து உடலை அடக்கம் செய்ய முயற்சி செய்தார்கள். தகவல் தெரிந்தவுடன் வருவாய்த்துறையினரை விரட்டினோம். பின்பு வருவாய் துறையினர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் உதவியாளர் ஆகியோர் எங்களிடம் வந்து இன்று முழு ஊரடங்கு கூட்டமாக இருக்கக் கூடாது கலைந்து செல்லுங்கள் என்று கூறினார்கள். நாங்கள் சமூக இடைவெளியுடன் போராட்டத்தை நடத்துகிறோம் என்று கூறியபோது டி.எஸ்.பி எங்களை அந்த கிராமத்திலிருந்து விரட்டும் நோக்கில் செயல்பட்டார். நாம் பிரச்சினை ஏற்படுத்தினால் கைது செய்து குடும்பத்தினரை மிரட்டி உடலை அடக்கம் செய்து விடுவார்கள் என்று நாங்கள் கிராமத்தை விட்டு வெளியேறி காட்டுப் பகுதியில் மூன்று மணி நேரம் இருந்தோம். பின்பு இரவு 9 மணிக்கு அந்தக் கிராமத்திற்குள் சென்று குடும்பத்தினரை சந்தித்து இரவும் அங்கேயே தங்கினோம்.

27ஆம் தேதி எங்களுடைய போராட்டம் ஐந்தாவது நாள் காலை 7 மணிக்கு வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினர் வந்து குடும்பத்தினரை மிரட்டினார்கள். ஆனால் குடும்பத்தினர் எந்த அச்சுறுத்தலுக்கும் பயப்படாமல், முடியாது என்று திருப்பி அனுப்பி விட்டார்கள். அன்று காலை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், சிபிசிஐடி விசாரனை வேண்டும் என்றும் வழக்கு பதிவு செய்து வழக்கு விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கு 28-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பின்பு காவல் துறையினரின் அச்சுறுத்தல் ஏதுமில்லை. இரண்டாம் நாளிலியே பிரச்சினை முடிந்து விடும் என்று எண்ணி மாற்று துணி எதுவும் கொண்டு செல்லாமல் போயிருந்தோம். ஆனால், நான்கு நாட்கள் தங்கியிருந்து பணி செய்ய வேண்டியதாயிற்று, ஒரே சட்டையை துவைத்து துவைத்து பயன்படுத்தினோம். காவல்துறையினர் நெருக்கடியால் இரண்டு நாட்கள் கைலி, பனியன் மட்டும் அணிந்து அந்த ஊரில் பணி செய்தோம். அன்று டாக்டர் அய்யா அவர்கள் அனுமதி பெற்று இரவு 9 மணிக்கு ஊருக்கு வந்தேன். மறு நாள் காலை எட்டு மணிக்கு அந்த ஊரில் இருப்பேன் என்று டாக்டர் அய்யா அவர்களுக்கு வாக்குறுதி கொடுத்து இருந்தேன்.

28ம் தேதி காலை 08:30மணி அளவில் அந்த ஊருக்கு சென்றுவிட்டேன். டாக்டர் அய்யா அவர்கள் காலை 08:45க்கு தொடர்பு கொண்டு, சிவகுமார் வந்து விட்டாயா? என்று கேட்டார்கள். எங்களுக்கு பல இடைஞசல்களும், அச்சுறுத்தல்களும் வந்தபோதெல்லாம் எங்களுக்கு ஊக்கமும் தைரியமும் கொடுத்து களப்பணியாற்ற உத்தரவிட்டார்கள்.

29ம் தேதி ஆறாம் நாள் போராட்டம் துவங்கியது. போலீசாரின் அச்சுறுத்தல் ஏதுமில்லை. குடும்பத்தோடு குடும்பமாக போராட்டத்தில் ஈடுபட்டோம். அன்று உச்சநீதிமன்ற கிளையில் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. காவல்துறையின் சார்பாக பிரேத பரிசோதனை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் நான்கு காயங்கள் இருந்ததாக பரிசோதனை அறிக்கை கொடுக்கப்பட்டது. பின்பு நமது வழக்கறிஞர்கள் மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று கேட்டார்கள். வழக்கு மறுநாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டது, அன்றிரவு அங்கேயே தங்கி இருந்து போராட்டத்தில் ஈடுபட்டோம்.

30ம்தேதி எங்களது எட்டாவது நாள் போராட்டம் துவங்கியது. அன்று வழக்கு முதல் வழக்காக வந்தது. மறு பிரேத பரிசோதனைக்கு நீதிபதி அவர்கள் உத்தரவிட்டார்கள் அன்றும் அங்கேயே தங்கி இருந்தோம்.

31ம் தேதி எங்களது போராட்டம் ஒன்பதாவது நாளாகியது. அன்று அதிகாலை உடல் மறு பிரேத பரிசோதனை இருப்பதால் நாங்களும், முத்துவின் குடும்பத்தாரும் புறப்பட்டு நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்றோம். மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உடலை வாங்கி நல்லடக்கம் செய்தோம். பின்பு அந்த குடும்பத்தினரை சந்தித்து உங்களுக்கு புதிய தமிழகம் என்றும் துணை நிற்கும் என்று ஆறுதல் கூறிவிட்டு டாக்டர் அய்யா அவர்களும் முத்துவின் குடும்பத்தாரிடமும் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார்கள். இந்த ஒன்பது நாள் போராட்டத்தில் டாக்டர் அய்யா அவர்கள் இரவு பகல் என்று பாராமல் எங்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுத்தார்கள். அதிகாலை 8 மணி அளவில் தினமும் தொடர்பு கொண்டு பேசி ஆலோசனைகள் வழங்கி வந்தார்கள். இப்போரட்டத்தில் ஒன்பது நாள் கடுமையான போராட்டம் எங்களுக்கு வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. எங்கள் உழைப்புக்கு கிடைத்த வெற்றி என்று பெருமையாக கூறி கொள்வோம். என்று இவ்வாறு அவர் கூறினார்.

இந்த தருணத்தில் டாக்டர் அய்யாவின் ஆணைக்கிணங்க போரட்டத்தில் முக்கிய பங்காற்றிய மாநில நிர்வாகி வே.க.அய்யர், ஆசிரியர் மாடசாமி, திருநெல்வேலி மாவட்ட பொறுப்பாளர் சிவக்குமார், த.ஜான் கிறிஸ்டோபர், க.பாலாஜி, கடையம் ஒன்றியச் செயலாளர் விஜயகுமார், பூவாணி இலட்சுமண பாண்டியன், கார்த்திக் மள்ளர், குபேந்திரன் பாண்டியன் திருநெல்வேலி-தென்காசி-தூத்துக்குடி-விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள் செ.இராஜேந்திரன், முருகன், தங்கராமகிருஷ்ணன், இராஜலிங்கம், வே.சுப்பிரமணியன், க.நடராஜன், பாறை இராமச்சந்திரன், இன்பராஜ், செல்லப்பா, மணிகண்டன், சுரேந்திரன், செல்வராஜ், முத்து, கலைச்செல்வம், சென்னை இரத்தினபிரகாஷ், அஜீத் மற்றும் இந்த வழக்கில் உறுதுணையாக நின்ற வழக்கறிஞர் செல்வக்குமார், மதுரை வழக்கறிஞர்கள் ஹென்றி திபேன், கண்ணன், வாகீஷ்வரன் மற்றும் வாகைக்குளம் கிராம பொதுமக்களுக்கும், சுற்றுவட்டார விவசாயிகளுக்கும், ஆதரவு தெரிவித்த அரசியல் கட்சியினருக்கும், சமூக ஆர்வலர்களுக்கும், சமூக வலைதளங்களில் ஆதரவு கொடுத்த அனைவருக்கும்; எனது நன்றியை தெரிவித்துக்கொள்ள கடமைபட்டுள்ளேன் என்று நெல்லை (வடக்கு) மாவட்டச் செயலாளர் மூ.சிவக்குமார் அவர்கள் தெரிவித்தார்.

செய்தி : சரவணன்
புகைப்படங்கள் : ஸ்ரீ வீ அஜீத் குமார்


1 thought on “விவசாயி அணைக்கரை முத்துவின் மரணமும், புதிய தமிழகம் கட்சியின் 9 நாட்கள் போராட்டமும்!

  1. நன்று ..ஒற்றுமைக்கும் தங்களின் போராட்டத்திற்கும் கிடைத்த வெற்றி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *