புதிய கல்வி கொள்கை 2020

குழந்தைகளின் பன்முக அறிவுத் திறமையை வளர்ப்பதற்கு உரிய வாய்ப்புகளை புதிய கல்விக் கொள்கை உருவாக்கும் – டாக்டர் கிருஷ்ணசாமி!

Dr Krishnasamy Political Puthiya Tamilagam

புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் இன்று(31-07-2020) வெளியிட்டுள்ள அறிக்கை:

மனப்பாட கல்வி முறைக்கு (Rote Learning) முடிவு கட்டும் புதிய கல்விக் கொள்கை 2020!

கஸ்தூரி ரங்கன் கமிட்டி ஆய்ந்து, அறிந்து அளித்த தேசிய புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு தற்பொழுது ஏற்றுக் கொண்டுள்ளது. இப்போது வெளியிடப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ள பல அம்சங்கள் முற்போக்கானதாகவும், அனைத்து பிரிவினருக்கும் சமவாய்ப்பு (Equity and Equality) அளிக்கக் கூடியதாகவும், மனனம் செய்து ஒப்புவிப்பது, தேர்வு எழுதுவது, மதிப்பெண்கள் பெறுவது எனும் பழைய பஞ்சாங்க வழிமுறைகளை தவிர்த்து குழந்தைகளின் பன்முக அறிவுத் திறமையை வளர்ப்பதற்கு உரிய வாய்ப்புகளை புதிய கல்விக் கொள்கை உருவாக்கும் என நம்பலாம். 

இதுவரை ஆசிரியரை மையப்படுத்தி இருந்த கல்வி முறைக்கு மாறாக, குழந்தையை மையப்படுத்தி அமைந்துள்ள (Child Centric) புதிய கல்வி முறை குழந்தைகள் மற்றும் பெற்றோர்களின் மன அழுத்தத்தை வெகுவாக குறைக்கும். குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் பார்வையில் இது மிகவும் வரவேற்க தகுந்த அம்சமாகும். 

இப்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கை, வெறும் எழுத்தளவில் இல்லாமல் செயல்பட்டிற்கான தீர்க்கமான திட்டமாக இருக்குமேயாயின் 21-ஆம் நூற்றாண்டின் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் அமையும். இதன் மூலம் அனைத்து குழந்தைகளும் குறைந்தது ஏதாவது ஒரு துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களாக தங்களைத் தாங்களே இந்த சமூகத்தில் நிலை நிறுத்திக் கொள்ள (Stand Alone) கூடியவர்களாகவும் வளருவார்கள் என்பதில் ஐயமில்லை. 

இந்த புதிய கல்வி கொள்கையில் உள்ள சில குறைபாடுகளை நீக்கியும், இடைவெளிகளை நிரப்பிய பின், இதன் ஒட்டுமொத்த நோக்கத்தை அனைவரும் உள்வாங்கி கொள்வதிலும், முழுவீச்சுடன் அமல்படுத்துவதில் தான் இதன் வெற்றி அடங்கியிருக்கிறது. என்று கூறியுள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *