munnar landslide

நிலச்சரிவில் உயிரிழந்த மூணாறு தோட்டத் தொழிலாளர்கள் குடும்பத்திற்கு கேரளா அரசும், டாடா நிறுவனமும் இழப்பீடு வழங்க வேண்டும் – டாக்டர் கிருஷ்ணசாமி.

Dr Krishnasamy Political Puthiya Tamilagam

புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் இன்று வெளியிட்ட அறிக்கை;

நிலச்சரிவில் உயிரிழந்த மூணாறு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு புதிய தமிழகம் கட்சியின் ஆழ்ந்த இரங்கல்!

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு பகுதியில் தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்ட பல்லாயிரக்கணக்கான தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் டாடா நிறுவனத்திற்கு சொந்தமான கண்ணன்தேவன் எஸ்டேட்டில் நான்கு தலைமுறைகளாக பணிபுரிந்து வருகின்றனர். ஏறக்குறைய நூறு ஆண்டுகளுக்கு முன்பு, ஆங்கிலேயருடைய காலத்தில் கட்டிக் கொடுக்கப்பட்ட, பாதுகாப்பற்ற, வாழ்வதற்கு சிறிதும் தகுதியற்ற வீடுகளிலேயே இன்னும் வாழ்ந்து வருகிறார்கள். அதை சரிசெய்வதற்கு டாடா நிறுவனமும், கேரள அரசும் எந்த முயற்சியும் எடுத்ததாக தெரியவில்லை.

மூணாறு நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி

நான் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு, மூணாறில் உள்ள 30-க்கும் மேற்பட்ட எஸ்டேட்டுகளில் சுற்றுப்பயணம் செய்து, அங்கு பணிபுரியும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் குறைகளை கேட்டறிந்து அவர்களின் வாழ்விடங்களை நவீனப்படுத்தித் தரவேண்டும் என்று டாடா நிர்வாகத்திற்கும், கேரள மாநில அரசுக்கும் வேண்டுகோள் வைத்தேன். இந்தியாவெங்கும் இருக்கக்கூடிய தேயிலைத் தோட்ட முதலாளிகள் இலாபம் என்ற ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறார்களே தவிர, தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடைய வாழ்க்கையை மேம்படுத்துவது குறித்து எவ்வித கவனமும் செலுத்துவதில்லை.

கடந்த ஒரு வார காலமாக கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையின் காரணமாக மூணாறு – இராஜமலை பகுதியில் பெட்டிகுடி என்னும் எஸ்டேட்டில் மலைச்சரிவில் ஆபத்தான நிலையில் கட்டப்பட்டிருந்த 40-க்கும் மேற்பட்ட வீடுகள் மண் சரிவுக்கு உள்ளாகி 85-க்கும் மேற்பட்டோர் மரணம் எய்தியிருக்கிறார்கள் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

மூணாறு - ராஜமலை நிலச்சரிவு
மூணாறு – ராஜமலை நிலச்சரிவு – பழைய புகைப்படம்

85 பேரில் 52 பேர் தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு பேரூராட்சிக்கு உட்பட்ட பாரதி நகரைப் பூர்விகமாக கொண்ட தேவேந்திரகுல வேளாளர் மக்கள் ஆவர். எஞ்சியிருக்கக்கூடிய 25-க்கும் மேற்பட்டோர் திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த தேவேந்திரகுல வேளாளர் மக்களே ஆவர்.

மூணாறு – ராஜமலை நிலச்சரிவு பகுதி – தற்போது

நாடெங்கும் கரோனா இருக்கக்கூடிய இந்த சூழலில் ஒரே பகுதியைச் சேர்ந்த 85-க்கும் மேற்பட்ட மக்களின் உயிரிழப்பு சொல்லொண்ணா வேதனையைத் தருகிறது. அவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுடைய குடும்பத்தாருக்கு கேரள அரசு சார்பில் தலா ரூ.50 இலட்சமும், டாடா நிறுவனத்தின் சார்பாக ரூ.50 இலட்சமும் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் நடை பயணம்

கடந்த 25 வருடங்களாக தமிழகத்தில் இருக்கக்கூடிய மாஞ்சோலை, வால்பாறை, ஹைவேவிஸ், நீலகிரி, கூடலூர் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புகளை நவீனப்படுத்தவும், அவர்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் புதிய தமிழகம் கட்சி சார்பாக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். எனினும் எந்த மாநில அரசுகளும், தோட்ட நிர்வாகங்களும் செவிசாய்க்கவில்லை.

தேயிலைத் தோட்டத் தொழிலாளர் ஊதிய பிரச்சனை

இனியாவது, விழித்துக் கொண்டு எச்சரிக்கையுடன் தமிழகத்தில் மட்டுமல்ல, அண்டை மாநிலங்களான கேரளம், கர்நாடகம், மேற்கு வங்காளம், அசாம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வாழக்கூடிய தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்விடத்தையும், வாழ்வாதாரத்தையும் நவீனபடுத்தவும், மேம்படுத்தவும் மத்திய, மாநில அரசுகள் சிறப்பு சட்டம் கொண்டுவர வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். என்று கூறியுள்ளார்.


2 thoughts on “நிலச்சரிவில் உயிரிழந்த மூணாறு தோட்டத் தொழிலாளர்கள் குடும்பத்திற்கு கேரளா அரசும், டாடா நிறுவனமும் இழப்பீடு வழங்க வேண்டும் – டாக்டர் கிருஷ்ணசாமி.

  1. Moonaar thotta thozhilalarku kerala government permanent post kodukkappada veandum atthudan 25 lakh kodukka veandum adhu veay kuraivu dhan so. if the govt favour to the working class they must follow.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *