அருள்மிகு பாபநாச சுவாமி திருக்கோயில்

பாபநாசம் சிவன் கோயிலில் தேவேந்திர குல வேளாளர்களுக்கு முதல் மரியாதை, பரிவட்ட விழா

Devendra Kula Vellalar History

குறிஞ்சி நிலத்தில் வேட்டைச் சமூகமாய், முல்லை நிலத்தில் மேய்ச்சல் சமூகமாய் நாடோடிகளாய் (அலை குடிகளாய் ) அலைவுற்ற காலகட்டத்தில், நதிக்கரைச் சமவெளியில் காடுகளைத் திருத்தி நெல் விளையும் வயல்வெளிகளை (கழனிகள்) உருவாக்கி அதற்கு தமிழ் நிலத்தின் தொல் குடிகள் மருதநிலம் என்று பெயரிட்டனர். மருத நிலத்தில் வாழ்ந்த மக்கள் மள்ளர் எனப்பட்டனர். வளம், வீரம் என்று பொருளாகும் மள் என்கிற சொல்லை வேராகக் கொண்டே மள்ளர் எனப்பட்டனர் என்று தமிழறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.

குடும்பம் – வேளாண்மை – நிலவுடமை – அரசுருவாக்கம் என வரலாற்றின் பரிணாம வளர்ச்சிக்கு வித்திட்ட மருதநிலத்தில் தான் கலைகளும், இலக்கியங்களும் தோன்றி வளர்ந்தன, சமயங்களும், தத்துவங்களும் செழித்து வளர்ந்தன. கற்கோவில்கள் எழுந்தன என்று வரலாற்றாய்வாளர்கள் உறுதியிட்டு சொல்கிறார்கள். அப்படியானால் தமிழரின் நாகரீகம் நெல்லில் இருந்து முளைத்தெழுந்த நாகரீகம் என்று குறிப்பிடுவதுதானே பொருத்தமானதாக இருக்கும்.

நாகரீகத்தை தோற்றுவித்த தமிழ்நிலத்தின் ஆதி உழவர்களே குடும்பத்தை தலைமை தாங்கி வழிநடத்தும் குடும்பனாக, பல குடும்பங்களை இணைத்து ஊரைக் கட்டமைத்து தலைமை தாங்கி வழிநடத்தும் ஊர்க் குடும்பனாக, பல ஊர்களை ஒன்றிணைத்து தலைமை தாங்கி வழிநடத்தும் நாட்டுத் தலைவனாக, பல நாடுகளை இணைத்து தலைமை தாங்கி வழிநடத்தும் அரசனாக, அரசுகளை ஒன்றிணைத்து பேரரசை கட்டமைத்து தலைமை தாங்கி வழிநடத்தும் பேரரசனாக உருவெடுத்திருக்க முடியும்.

கடல் கொண்ட தென்னாடு என்று சொல்லப்படும் குமரிக் கண்டத்தில் நாற்பத்தி ஒன்பது நாடுகளைக் கொண்ட உலகின் முதல் பேரரசை நிறுவிய பாண்டிய மன்னனே தென்னாடுடைய ஆதிசிவனாவான். பாண்டிய மன்னர்களின் பள்ளிப் படைகளே சிவன் கோவில்களாக காட்சியளிக்கிறது. இன்றைக்கும் மள்ளர் குடியினரின் இடுகாட்டில் இருக்கும் பள்ளிப் படையின்மீது சிவலிங்கம் வைக்கப்பட்டு வழிபடுவதை இதனோடு பொருத்திச் சிந்திக்க வேண்டும்.

திருச்செந்தூர் முருகன் கோவில், நெல்லையப்பர் கோவில், தென்காசி காசி விஸ்வநாதர் கோவில், பாபநாசம் சிவன் கோவில், ராஜபாளையம் , மதுரை மீனாட்சியம்மன் கோவில், பழநி முருகன் கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில், கோவை பட்டீஸ்வரர் கோவில், பூம்புகார் சாயாவனம் கோவில் போன்ற கோவில்களில் மள்ளர் எனும் தேவேந்திர குல வேளாளர்களுக்கு முதல் மரியாதை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இது தவிர தமிழகம் முழுவதும் பெருந்தெய்வ கோவில்கள் சார்ந்து மள்ளர் எனும் தேவேந்திர குல வேளாளர் சமூகத்திற்கென்று 425 அற மடங்கள் நிறுவப்பட்டிருப்பது அதிகார வலிமை மிக்கவர்களாக மள்ளர்கள் இருந்துள்ளதை உணர்த்தக் கூடியதாக இருக்கிறது.

உள்ளூர் பொருளாதார வளர்ச்சியையும், சுழற்சியையும் மையப்படுத்தியே பெருந்தெய்வ வழிபாடும், கோவில்களும் கட்டமைக்கப்பட்டுள்ளன. மன்னரின் அரசவைக்கு இணையான சொத்துடைய அதிகார நிறுவனமாகவே கோவில்கள் திகழ்ந்தன. வட்டார அளவிலான உற்பத்திச் செயல்பாடுகள், அதிகாரப் பங்கீடுகள், சமூக உரிமைகள், பண்பாட்டு அசைவுகள் யாவற்றையும் கோவிலின் வழியாக முறைப்படுத்தும் வழக்கம் விஜயநகர தெலுங்கர் ஆட்சிக் காலம் வரையிலும் நடைமுறையில் இருந்துள்ளது.

கோவில்கள் சொத்துடைய அதிகார மையங்களாக விளங்குவதைக் கண்ட விஜயநகர தெலுங்கு ஆட்சியாளர்கள் கோவில்களுக்குள் சமஸ்கிருதத்தையும், பிராமணர்களையும் புகுத்தி அதிகாரத்தை பறித்துக் கொண்டனர். அவர்களைத் தொடர்ந்து வந்த ஆங்கிலேயர்களும் அதையே பின்பற்றினர். கோவிலோடு நேரடித் தொடர்புடைய தமிழர் குடிகளை கோவிலுக்கு வெளியே நிறுத்தும் வழக்கத்தை ஏற்படுத்தி கோவில் நிர்வாகத்தையும், அதன் சொத்துக்களையும் கைப்பற்றிக் கொண்டனர்.

ஆனாலும் மள்ளர் எனும் தேவேந்திர குல வேளாளர்களை கோவில் எனும் சொத்துடைய அதிகார மையத்திலிருந்து முழுவதுமாக அப்புறப்படுத்த முடியவில்லை. சில கோவில்களில் மட்டுமே மண்டகப்படி முதல் மரியாதை என்கிற பெயரில் கோவிலோடு உள்ள உறவு தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்தநாடே நம்முடையதுதாக இருக்கையில் கோவில் உரிமைகள் மட்டுமல்ல கோவில்களும் மீட்கப்பட வேண்டும். பாபநாசம் சிவன் கோவில் என்பது பாண்டிய மரபினரான மள்ளர் எனும் தேவேந்திர குல வேளாளர்களுக்கே முழு உரிமையுடையதாகும். இருப்பதைக் கொண்டு இழந்ததை மீட்போம்.

05.04.2021 அன்று பாபநாசம் சிவன் கோவிலில் மள்ளர் எனும் தேவேந்திர குல வேளாளர்களுக்கு முதலாம் மண்டகப்படியும், பரிவட்டமும் கட்டப்பட்டு முதல் மரியாதை செய்யப்பட்டது. இந்நிகழ்வை பாபநாசம் சந்திரன் மிகச் சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்திருந்தார். பாபநாசம் சந்திரன், சமூக முன்னோடி வழக்கறிஞர் சந்திரகாந்தன், மள்ளர் பேராயத்தின் தலைவர் சுபாசினி மள்ளத்தி, எழுத்தாளர் தமிழ்மாறன் மற்றும் ஊர்க்குடும்பர்களுக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்பட்டது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *